who we are
தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் வரலாறு
ஐக்கிய இராச்சியம்
தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் வரலாறு என்பது பிரித்தானியாவில் தமிழ்பேசும் மக்களின் குறிப்பாக எமது இளைய தலைமுறையின் கடந்த 26 ஆண்டு கால விளையாட்டு வரலாறு என்றே சொல்ல வேண்டும். 1992ம் ஆண்டு யூன் மாதம் 24ம் திகதி விம்பிள்டன்னில் யாழ்ப்பாண மாவட்டத்தின் எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த பன்னிரண்டு விளையாட்டில் அக்கறை கொண்டவர்கள் ஒன்றுகூடி இந்தநாட்டில் எம்மவர்களின் விளையாட்டுதுறை முன்னேற்றங்கள் பற்றிக் கலந்துரையாடினார்கள். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னிருவரையும் உள்ளடக்கியதான நிர்வாகம் திரு. பி. கணேசலிங்கம் தலைமையில் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக முதலாவது கிரிக்கெட் போட்டிகள் 31-08-1992இல் கறோவில் அமைந்த ஜோன் பில்லம் விளையாட்டு அரங்கில் பன்னிரண்டு பழையமாணவர் சங்கங்களின் விளையாட்டுக் குழுக்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. நிறுவியவர்களின் தீர்மானத்தின்படி சட்டதிட்டங்கள் (Constitution) உருவாக்கப்பட்டு பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் தமிழ்ப் பழைய
மாணவர் சங்கங்கள் இணைந்த யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் முழுமைபெற்றது. புதிய நிர்வாகங்கள் தெரிவுசெய்யப்பட்டு ஆண்டுதோறும் இரண்டு விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருவதுடன் வேறும் பல காத்திரமான திட்டங்களை நிறைவு செய்துள்ளன.
தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவது கடினம் என்றும் ஜனநாயக அமைப்புக்களின் செயற்பாடுகள் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகின்ற வேளையில் 26 ஆண்டுகளிற்கு மேலாக அறுபதிற்கு மேலான தமிழப் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்த இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செயற்படுவது பெருமைக்குரியது என்பதில் ஐயமில்லை. சங்கத்தின் பெயர் 1998ம் ஆண்டு காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் என மாற்றப்பட்டது. ஆண்டுதோறும் விளையாட்டு விழாக்களின் மூலம் கிடைக்கின்ற இலாபத்தில் மூன்றில் ஒரு பங்கு நிரந்தர வைப்பில் இடப்படுகின்றது. இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் விளையாட்டுத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் வண்ணம் இந்த நிதி அமைக்கப்பட்டுள்ளது. மிகுதி மூன்றில் இரண்டு பகுதிப்பணம் பங்குபற்றும் பழைய மாணவர் சங்கங்களிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்ம், கரப்பந்தாட்டம் என்பன பல்வேறு வயதெல்லைப் பிரிவுகளில் ஆண்டுதோறும் மே மாத வங்கிவிடுமுறையிலும் ஆகஸ்ட் மாத வங்கிவிடுமுறையிலும் நடாத்தப்படுகின்றது. தமிழ்ப்பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் போட்டிகள் அனைத்தும் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக நடாத்தப்படுகின்றன
1. போட்டிகளின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் விளையாட்டில் ஆர்வத்தைத்தூண்டி இளைஞர்களை திறமைமிக்க விளையாட்டு வீரர்களாக உருவாக்குவது.
2. விளையாட்டின் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது
மேற்படி நோக்கங்கள் ஓரளவு நிறைவுபெற்றுள்ளதாக நம்புகின்றோம். கனடாவில் வதியும் JSSA (இலங்கை)யின் முன்னாள் செயலாளரான திரு யோகரத்தினம் ஆசிரியர் அவர்களை எமது விளையாட்டு விழாவிற்கு சிறப்புவிருந்தினராக அழைத்தன்மூலம் கனடாவிலும் ஒரு தமிழ்ப்பாடசாலைகள் விளையாடட்டுச் சங்கம் உருவாக்கப்பட்டு நல்லமுறையில் செயற்படுகின்றது. எமது சங்கத்தின் 2001ம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு கனடாவிலிருந்து ஒரு வலைபந்தாட்டக் குழுவினரை அழைத்துப் போட்டிகளை நடாத்தினோம். இதற்கு அடுத்த வருடம் எமது வலைபந்தாட்டக் குழுவினரை கனடாவிற்கு அழைத்துச்சென்று போட்டிகளில் பங்கு கொள்ளவைத்தோம். போரினால் செயற்படாதிருந்த யாழ்ப்பாணம் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தை (ISSA இலங்கை) எமது முயற்சியினால் மீண்டும் இயங்க வைத்தோம். யாழ்ப்பாணத்தில் ஒரு உதைபந்தாட்டப்பயிற்சி முகாமை நடாத்தினோம். வருடம் முழுவதும் பல்வேறு விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் பாடசாலைகளின் விளையாட்டுக் குழுக்களுக்கும் வீரர்களுக்கும் பரிசளிப்புவிழாவை நடாத்தியதன் மூலம் கௌரவத்தைக் கொடுத்து விளையாட்டில் அக்கறை ஏற்படுத்த முயற்சி எடுத்தோம். எமது அடுத்த தலைமுறை பெண்பிள்ளைகளை ஒரு வலைப்பந்தாட்டக் குழுவாக இலங்கைக்கு அழைத்துச்சென்றோம். இந்தக் குழுவில் இங்கிலாந்து மண்ணில் பிறந்த எமது அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகள் அங்கம் வகித்தனர். இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களில் பாடசாலைகளின் வலைப்பந்தாட்டக் குழுக்களுடன் போட்டிகளில் பங்குபற்றினார்கள்.
எமது சங்கத்தின் நீண்டகால நோக்கங்களில் ஒன்றான, இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக்களுக்கு நிரந்தரமான ஏற்பாடுகள் செய்வதைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சியில் ஒரு விளையாட்டுக் கல்லூரி அமைப்பதற்கான திட்டத்தில் நாம் முழுமையாக பங்குகொண்டோம். ஏறத்தாள 75 இலட்சம் ரூபா செலவுசெய்த போதிலும் நாட்டின் சூழ்நிலைகளும் முடிந்துபோன போரும் இந்த அரிய திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
எமது விளையாட்டு வீரர்களை கௌரவிப்பதையும் உற்சாகப்படுத்துவதையும் கருத்தில்கொண்டு ஒரு Tamil Sports Awards என்ற நிகழ்ச்சியை நடாத்தினோம். TSSA யின் நோக்கங்களான இந்த மண்ணிலும் நாம் பிறந்த மண்ணிலும் எம்மவரின் விளையாட்டுத்துறை முன்னேற்றங்களுக்கு TSSA தொடர்ந்து செயற்படும் என நம்பலாம்.